லாஸ்ஏஞ்சலிஸ்: வாட்ஸ்ஆப் நிறுவனத்தை, கடந்த 2014ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் வாங்கியதை அடுத்து, வாட்ஸ்ஆப் பயனர்களின் பல தகவல்கள், பேஸ்புக் நிறுவனத்திற்கு பகிரப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு முதல், வாட்ஸ்ஆப் பயனர்கள் குறித்த அதிக தகவல்கள், பேஸ்புக்கிடம் பகிரப்பட்டுள்ளன. இதுகுறித்த கவலைகள், வாட்ஸ்ஆப் பயனர்களிடம் ஏற்கனவே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த திங்களன்று, தனது பயன்பாடு மற்றும் தனியுரிமைக் கொள்கையைப் புதுப்பித்தது வாட்ஸ்ஆப். தனது பயன்பாட்டு நடைமுறைகளை விரிவாக்குவதற்காக இவ்வாறு செய்தது வாட்ஸ்ஆப் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் புதுப்பிப்பு நடவடிக்கையின் மூலமாக, குறிப்பிட்ட தரவை, பேஸ்புக்குடன் பகிர்வதிலிருந்து தவிர்ப்பதை தேர்வுசெய்யும் வாய்ப்பை அகற்றியுள்ளது வாட்ஸ்ஆப் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, நீங்கள் தற்போது வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தினால், உங்கள் பேஸ்புக் விளம்பரங்கள் மற்றும் தயாரிப்புகளின் அனுபவங்களை மேம்படுத்த உங்கள் வாட்ஸ்அப் கணக்கு தொடர்பான தகவல்களை, பேஸ்புக் உடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்பதை நீங்கள் தேர்வு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.