டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியீடு: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உரிய ஒதுக்கீடுகள் மற்றும் தொகுதி மறுவரையறை செய்யப்படவில்லை என கூறி, திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் தொகுதிகளை மறுவரையறை செய்து, தேர்தலை விரைந்து நடத்த ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்ற உத்தரவிட்டும் தேர்தல் நடத்தவில்லை என திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிடக்கோரி திமுக தரப்பில் வழக்கறிஞர் ஜெய் சுகின் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அக்டோபர் மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. ஆனால், தேர்தலை நடத்த மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு அரசு தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் விரும்புகிறதா ? உச்சநீதிமன்றம் தேர்தல் நடத்த விரும்பவில்லையெனில், உச்சநீதிமன்றமே முன்னின்று நடத்த தயாராக இருக்கிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், தொகுதி மறுவரையறை பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்றும், டிசம்பர் 2ம் தேதி  உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான அட்டவணை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தது.

அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் ஜெய் சுகின், “இன்னும் 9 மாவட்டங்களில் உரிய மறுவரையறை செய்யப்படாமல் இருக்கிறது. தேர்தல் ஆணையம் தொடர்ந்து மெத்தனமாக செயல்பட்டு வருகிறது” என்று குற்றம்சாட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை டிசம்பர் 13ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.