திராவிடர் ரதம்: தி.வி.க. அறிவிப்பு


.

ஈரோடு:

திராவிடர் ரத ஊர்வலம்  மே 9 ஈரோட்டிலிருந்து புறப்படும் என்று தி.வி.க.அறிவித்துள்ளது.

விசுவ இந்து பரிஷத் அமைப்பின் ஆதரவு அமைப்பு சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ராமராஜ்ய ரத யாத்திரை துவங்கி பல மாநிலங்கள் வழியாக தமிழகம் வந்தபோது, இங்கு கடும் எதிர்ப்பு உருவானது. பல்வேறு கட்சிகள் இந்த யாத்திரையை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டங்களை நடத்தின.

தமிழக அரசு, சிறப்பு பாதுகாப்பு அளித்து ரதத்தை வழியனுப்பி வைத்தது.

 

 

இந்த நிலையில்,  திராவிடர் ரதம் மே 9 அன்று ஈரோட்டில் இருந்து புறப்படம் என்று திராவிடர் விடுதலைக் கழகம் அறிவித்துள்ளது. இதற்கு “பெரியார் – அம்பேத்கர் கண்ணாடி, கைத்தடி ஊர்வலம்”  என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது குறித்து அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“மனித உருவமும், யானை தலையும் கொண்ட விநாயகரை பிளாஸ்டிக் சர்ஜரிக்கு ஒப்பிட்டு பிரதமர் மோடி விஞ்ஞான மாநாட்டில் பேசினார். மாட்டுக்கறியை பாஜக அரசு தடை செய்தது. இது போன்ற அறிவியலுக்குப் புறம்பான மத்திய பாஜக அரசின் செயல்களை மக்களிடம் விளக்கவும், தமிழகத்தில் தமிழருக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்பதை வலியுறுத்தியும், கெயில், மீத்தேன், ஹைட்ரோகார்பன், கூடங்குளம், ஸ்டெர்லைட் போன்ற நாசகார திட்டங்களை தமிழகத்தில் இருந்து விரட்டவும், சமூகநீதியை நிலைநாட்டவும் இந்த பெரியார் – அம்பேத்கர் கண்ணாடி, கைத்தடி ஊர்வலம் நடத்தப்படுகிறது” என்று திராவிடர் விடுதலைக் கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.