புதுச்சேரிக்கு விரைவில் விடிவு காலம்! முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்துக்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த முதல்வர் நாராயண சாமி, கவர்னர் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறினார்.

புதுச்சேரி மாநிலம் பூரணாங்கும் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடத்தை திறந்த வைத்து பேசிய முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் மொத்தம் 71 நூலகங்கள் இருப்பதாகவும், ஆனால் சில நூலகங்களில் அதிகாரிகள் இல்லாததால்  செயல்படாமல் முடங்கி உள்ளதாக தெரிவித்தார்.

இந்த நூலகங்களை நிர்வகிக்க தேவையான அதிகாரிகள்  ஒப்பந்த அடிப்படையில்  நியமிக்க அரசு நடவடிக்கை எடுமத்து வருவதாக தெரிவித்தவர், விரைவில் நூலக அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

தொடர்ந்து பேசியவர், புதுச்சேரி கவர்னரின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்தார். புதுச்சேரி மக்களுக்கு இலவச அரிசி திட்டம்  கொண்டு வரப்பட்டது, மாநில காங்கிரஸ் அரசின் கொள்கை என்றும், அதை திறம்பட செயல்பட்டு வந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த ரங்கசாமி, அரிசி வேண்டாம் பணம் கொடுங்கள் என மத்திய அரசை கேட்டுக்கொண்டதன் பேரில், பணமாக வழங்கப்பட்டது.

ஆனால், புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு, தங்களுக்கு பணம் வேண்டாம், அரிசிதான் வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியதாகவும், இதற்கு மத்திய அமைச்சரும் சாதகமான பதிலை தெரிவித்த நிலையில், கவர்னர் கிரண்பெடி உள்ளே நுழைந்து,  புதுச்சேரி மக்களுக்கு அரிசிக்கு பதிலாக பணம் தான் வழங்கிட வேண்டும் என்று கடிதம் எழுதி பிரச்சினையை உருவாக்கி விட்டார்.

ஏற்கனவே இலவச அரிசி திட்டத்திற்காக  மாநில அரசு 180 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்த நிலையில், மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக மாநில காங்கிரஸ் அரசு, தற்போது 5 மாத இலவச அரிசிக்கான பணத்தை  மக்களின்  வங்கி கணக்கில் செலுத்தி உள்ளது என்றார்.

மாநில அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு எதிராக கவர்னர் கிரண்பெடி கொடுத்து வரும் பல்வேறு பிரச்சினை களுக்கு இடையிலும்,முதியோர், மாற்றுத்திறனாளிகளக்கு  ஓய்வூதியம், கலப்பு திருமண உதவி தொகை, கல்வி உதவி தொகை போன்ற மக்கள்நலத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும்,  புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் 200 பேருக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்று கூறியவர், ஆனால், இது போன்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற ஒரு கூட்டம் எதிர்ப்பு தெரிவித்து செயல்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினால்.

மத்திய அரசின் வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதம்தான் சுட்டிக்காட்டிய நாராயணசாமி, புதுச்சேரி மாநில அரசின் வளர்ச்சி விகிதம் 11.4 சதவீதம் என்றும், , 7 யூனியன் பிரதேசங்களில் சிறந்த நிர்வாகமாக புதுச்சேரி தேர்வு செய்யப்பட்டு, 4 விருதுகள் கிடைத்துள்ளது என்று பெருமிதம் தெரிவித்தவர்,  மாநில நிர்வாகத்திலும், கவர்னரின் தலையீடு அதிகரித்து வருவதாகவும் கூறினார்.

நமது மாநில மக்களின் நலனுக்காக,  மத்திய அரசையும், கவர்னரையம் எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இதில் நல்ல முடிவு கிடைக்கும், புதுச்சேரிக்கு விரைவில் விடிவு காலம் பிறக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Chief Minister Narayanasamy, Kiran Bedi, Puducherry
-=-