மும்பை

லைமறைவாக உள்ள மும்பை நிழல் உலக தாதா தாவுத் இப்ரகிம் இந்தியா வரத் தயாராக உள்ளதாக அவர் வழக்கறிஞர் தெரிவித்தார்.

மும்பையின் நிழல் உலக தாதா என அழைக்கப்படும் தாவூது இப்ரகிம் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் சம்பந்தப் பட்டுள்ளதாக அவர் மீது குற்றச் சாட்டு உள்ளது.   அவர் இந்தியாவில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.   பாகிஸ்தானில் அவர் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது.    பாக் அரசு அதை  மறுத்து வருகிறது.

இந்ந்நிலையில் தாவுதின் சகோதரர் இக்பால் இப்ராகிம் கஸ்கர் மீதான வழக்கு விசாரணை மும்பையின் தானே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.   அவர் சார்பாக பிரபல கிரிமினல் வழக்கறிஞர் சியாம் கேஸ்வானி ஆஜரானார்.    அவர் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது கேஸ்வானி, “தாவூது இப்ராகிம் இந்தியாவுக்கு வரத் தயாராக உள்ளார்.   அதற்கு சில நிபந்தனைகள் விதித்துள்ளார். அதில் ஒன்றாக தன்னை மும்பையில் உள்ள ஆர்தர் சாலை மத்திய சிறைச்சாலையில் அடைக்க வேண்டும் என்பதாகும்.  அவர் ஏற்க்னவே தான் இந்தியா வர விரும்புவதாக முன்னாள் அமைச்சரும் பிரபல வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி மூலம் தெரிவித்துள்ளார்.   ஆனால் இந்திய அரசு அவருக்கு சரியான விடை அளிக்காததால் அவரால் வர முடியவில்லை”  எனத் தெரிவித்துள்ளார்.

நான்கு வருடம் முன்பு மும்பையில் தீவிர வாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் இதே ஆர்தர் சாலை மத்திய சிறையில் மரண தண்டனை அளிக்கப்படும் வரை அடைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.