புதுடெல்லி:
பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியும், நடிகையும், எம்.பி.யுமான ஜெயா பச்சன், திரைபிரபலங்கள் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்புவது, விமர்சிக்கப்படுவது பற்றி ராஜ்யசபாவில் பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதனால் #JayaBachchanShamlessLady என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பின் பாலிவுட்டில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. வாரிசு சினிமா பிரபலங்களால் ஏற்பட்ட மன உளைச்சலில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என ஆரம்பத்தில் எழுந்த குற்றச்சாட்டுகள் இப்போது பணமோசடி, போதை என வேறு விதமாக பயணிக்கிறது. மேலும் பாலிவுட்டில் போதை பொருள் விவகாரத்தில் சுஷாந்த்தின் முன்னாள் காதலி கைதாகி உள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதில் மேலும் பல பிரபலங்கள் சிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சுஷாந்திற்கு நீதி வேண்டி சமூகவலைதளங்களில் தினமும் குரல்கள் ஒலித்த வண்ணம் உள்ளன. அதேசமயம், பாலிவுட்டில் பல பிரபலங்களும் நெட்டிசன்களின் விமர்சனங்களுக்கும், கேலி, கிண்டல்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும், பா.ஜ., எம்.பி.யுமான ரவி கிஷன், ”ஹந்தி திரையுலகில் போதைபொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் போதைப்பொருள் நடமாட்டத்திற்கு இவர்களின் துணைகொண்டு செயல்பட்டு இந்திய இளைஞர்களை நாசமாக்குவதாகவும்” குற்றம் சாட்டினார்.

இதை எதிர்த்தும், சமூக ஊடகங்களில் திரையுலகினர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் ராஜ்சபாவில் நேற்று(செப்., 15) பேசிய நடிகையும், சமாஜ்வாடி எம்.பி.யுமான ஜெயாபச்சன், “சினிமா பிரபலங்களை தொடர்ந்து வசைபாடுவதை தடுக்க வேண்டும். சினிமா மூலம் புகழ் பெற்றவர்கள் அந்த துறையையே அவதூறாக பேசி வருகின்றனர். ஒரு சிலரின் தவறுக்காக ஒட்டுமொத்த சினிமாவையும் அசிங்கப்படுத்துவதை ஏற்க முடியாது. இந்த நாட்டில் அதிக வருமான வரி செலுத்துபவர்களில் பல திரைப்பிரபலங்கள் இருக்கிறார்கள். பிரபலங்கள் பற்றி சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகும் கருத்துகளைக் கண்டு தான் வருந்துவதாகவும், திரைத்துறையினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

ஜெயா பச்சனின் இந்த பேச்சுக்கு திரையுலகினர் இடையே ஆதரவு கிடைத்தாலும், சமூகவலைதளங்களில் பலர் வசை பாடி வருகின்றனர். #JayaBachchanShamlessLady என்ற ஹேஷ்டாக்கை வைரலாக்கி உள்ளனர். 40 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் இதை ரீ-டுவீட் செய்துள்ளனர். குறிப்பாக பாலிவுட்டில் நடக்கும் போதை, பார்ட்டி கலாச்சார படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் போதை பார்டியில் ஜெயா பச்சனின் மகள் கலந்து கொண்ட போட்டோ, வீடியோக்களும் இடம் பெற்றுள்ளது. மேலும் ஜெயா பச்சனை வைத்து பல வகையான மீம்ஸ்களும் டிரண்ட் ஆகி வருகிறது.