மும்பை:

மோடி தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளை முடக்கும் வேலையில் தீவிரமாக இறங்கி உள்ளது. சமீபத்தில் கர்நாடக சட்டமன்றத்தை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றிய நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்திலும் தனது கை வரிசையை காட்டத் தொடங்கி உள்ளது.

அங்கு தேசியவாத காங்கிரசின் 3 எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு எம்எல்ஏவை தனது கட்சிக்கு இழுத்துள்ளது.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மகாராஷ்டிரா மாநிலத்தில்  படுதோல்வியை சந்தித்தது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு அக்டோபர் மாதம் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் தற்போதே களமிறங்கி உள்ள பாரதிய ஜனதா எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வலைவீசி வருகிறது. இந்த வலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மும்பை வடாலா தொகுதி எம்.எல்.ஏ. காளிதாஸ் கோலம்கர், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைபவ் பிச்சாத் (அகோலா தொகுதி), சிவேந்திர ராஜே போசலே (சத்தாரா), சந்தீப் நாயக் (ஐரோலி) ஆகியோர் சிக்கி உள்ளனர்.

இவர்கள் நேற்று முன்தினம் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்த நிலையில், இன்று மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பா.ஜ.க.வில்  இணைந்தனர்.