டெல்லி மாநில பெண்கள் ஆணையத்தலைவராக பணியாற்றிவரும் சுவாதி மாலிவால் பெயரை குறிப்பிடாமல் ஒரு மத்திய அமைச்சர் மற்றும் டெல்லியில் உள்ள பிரபல தேசிய கட்சியின் தலைவர் ஆகியோரின் ஆதரவில் டெல்லியில் ஒரு பெரிய விபச்சார நெட்வொர்க் செயல்படுவதாக பகீர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
maliwal
டெல்லி மகளிர் ஆணையத்தலைவராக செயல்பட்டு வரும் சுவாதி மாலிவால் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த நவீன் ஜெய்ஹிந்த்தின் மனைவி ஆவார். இவர் ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தில் உறுப்பினராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மாநில பெண்கள் ஆணையத்துக்கு ஆட்களை தெரிவு செய்ததில் முறைகேடு நடந்ததாக இவர்மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சுவாதி மாலிவால் டெல்லி ஜிபி ரோட்டில் பல ஆயிரம் கோடி அளவில் பணம் புரளும் பெரிய விபச்சார நெட்வொர்க் செயல்பட்டு வருவதாகவும் 8 முதல் 10 வயதுக்கு உட்பட்ட இளம் சிறுமிகள் விற்கப்பட்டு அவர்கள் தினமும் கிட்டத்தட்ட 30 ஆண்களுடன் விபச்சாரத்தில் ஈடுபட கட்டாயப் படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த அக்கிரமம் இந்த நாட்டின் பாராளுமன்றத்துக்கு வெறும் 3 கி.மீ தொலைவில் நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
மத்திய அமைச்சர் ஒருவரது அரவணைப்பிலும், டெல்லியை சேர்ந்தவரும், தேசியக் கட்சி ஒன்றின் தலைவருமாக இருப்பவரது ஆதரவின் பேரிலும் இந்த நெட்வொர்க் செயல்பட்டு வருவதாக தனக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தன் மீது சுமத்தப்பட்ட வழக்கிலும் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து, தான் நிரபராதி என்று நிரூபித்து வெளியே வருவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.