டில்லி:

டில்லியில் விடுதி இடிக்கப்பட்டதாக திறந்தவெளியில் கூடாரம் அமைத்து தங்கியுள்ள பார்வையற்ற மாணவர்கள்.

டில்லி ஜனாக்புரி வீரேந்திர நகரில் பார்வையற்ற மாணவர்களின் விடுதி இருந்தது. கடந்த 17 ஆண்டுகளாக இந்த விடுதியை 17 ஆண்டுகளாக பார்வையற்றோருக்காக செயல்படும் லூயிஸ் நல முற்போக்கு சங்கம் நடத்தி வந்தது. இதில் பார்வையற்ற டில்லி பல்லைக்கழக மாணவர்கள் மற்றும் அருகில் உள்ள சர்வோதயா பள்ளி மாணவர்கள் என 20 பேர் வரை தங்கியிருந்தனர்.

விடுதியை கமலேஷ் குமார் என்பவர் நிர்வகித்து வந்தார். கடந்த 15ம் தேதி காலை 11 மணிக்கு இந்த விடுதிக்கு வந்த டில்லி வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் மற்றும் போலீசார் வந்தனர். டில்லி வளர்ச்சி ஆணை பூங்காவுக்கு அருகே இந்த விடுதி கட்டப்பட்டிருப்பதாக கூறி இடித்துவிட்டனர்.

இடிப்பது குறித்து அதிகாரிகள் முன்கூட்டியே தகவலும் அளிக்கவில்லை என்று விடுதி நிர்வாகத்தினர் புகார் அளித்தனர். அதோடு தங்கியிருந்த மாணவர்கள் தங்களது உடமைகளை எடுத்துக் கொள்ள கூட அவகாசம் வழங்காமல் இடித்துவிட்டனர் என்று குற்றம்சாட்டப்பட்டது.

இது குறித்து டில்லி வளர்ச்சி ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த விடுதி இடிக்கப்படவுள்ளதால் காலி செய்யுமாறு குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் 4 முறை விடுதி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இடிப்பதற்கு முதல் நாளும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எழுத்துப்பூர்வ அறிவிப்பு கொடுத்தால் அதை வைத்து நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற வாய்ப்பு ஏற்படும்.

இதனால் ஆக்ரமிப்புகளை அகற்றுவதில் ஆணையத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். இங்கு தங்கியுள்ள குழந்தைகளின் நலனை கருதி ஆக்ரமிப்பை அகற்றிக்கொள்ளுமாறு நிர்வாகத்துக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும் மாணவர்கள் இதர விடுதிகளில் தங்கிக் கொள்ளலாம். தனியார் விடுதியை ஏன் ஆக்ரமிப்பு நிலத்தில் கட்டி நடத்த வேண்டும்?’’ என்றனர்.

லாப நோக்கமின்றி பார்வையற்ற மாணவர்கள் மூலமே இந்த விடுதி நடத்தப்பட்டு வந்தது. தற்போது மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக திறந்தவெளியில் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனர். அதையும் காலி செய்யும் படி மாநகராட்சி அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.