15% கார்ப்பரேட் வரி வசதியைப் பெறக் காலகட்டம் நீட்டிப்பு : நிதி அமைச்சர்

டில்லி

புதிய நிறுவனங்களுக்கு 15% கார்பரேட் வரி வசதியைப் பெறக் காலகட்டத்தை மேலும் நீட்டிக்க உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர்களுடன் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார்.  இந்த கூட்டத்தில்  பொருளாதார விவகாரத் துறைச் செயலர் தருண் பஜாஜ், கார்ப்பரேட் விவகாரத்துறை செயலர் தேபாசிஷ் பண்டா, நிதி மற்றும் வருவாய் செயலர் அஜய்பூஷன் பாண்டே ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “இந்தியாவில் தொழில்களுக்கு ஊக்கம் அளிக்க மற்றும் பொருளாதாரத்தை மீட்டு எடுக்க அனைத்து ஆதரவும் அரசு வழங்கும்.   அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா அவசரக் கால கடன் என்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமின்றி அனைத்து நிறுவனங்களுக்கும் அளிக்கப்படும்.

இப்போது நிச்சயமாக பணப்புழக்க பிரச்சினை உள்ளது.  அதை நாங்கள் நியாயமான முறையிலும் தெளிவாகவும் கையாண்டு வருகிறோம்.  இதில் சிக்கல் இன்னும் இருந்தால் அதையும் நாங்கள் கவனிக்க உள்ளோம்.  வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை செலுத்தி விட வேண்டும் என அனைத்து அரசுத் துறைகளையும் கேட்டுக் கொண்டுள்ளோம்.  இதில் எந்த துறையில் பிரச்சினை இருந்தாலும் அதை அரசு கவனிக்கும்.

புதிய முதலீடுகளுக்கு 15% கார்ப்பரேட் வரி விகிதம் பெறுவதற்கான காலக் கெடுவை நீட்டிப்பது குறித்து நாங்கள் என்ன செய வேண்டும் என்பதைக் கவனித்து வருகிறோம்.    இதனால் பல தொழில்கள் பயன்பட வேண்டும் என அரசு எண்ணுகிறது.  இந்த காலக்கெடுவை 2023 மார்ச் 31 வரை நீட்டிக்க வேண்டும் என்னும் வேண்டுகோள் அரசு பரிசீலனையில் உள்ளது. விரைவில் இது குறித்து முடிவு எடுக்கப்படும்.

அனைவரும் கோரி வரும் ஜி எஸ் டி வரிக் குறைப்பு குறித்து அதற்கான குழுதான் முடிவு செய்யும்.   அதே வேளையில் அந்தக் குழு ஜி எஸ் டி மூலம் கிடைக்கும் வருவாயையும் கவனிக்க வேண்டியுள்ளது.  எனவே எந்தெந்த துறையில் வரி விகிதத்தைக் குறைப்பது என்னும் முடிவை அந்தக் குழு தான் எடுக்க முடியும்” எனக் கூறி உள்ளார்.

இந்த கூட்டத்தில் நிதி மற்றும் வருவாய் செயலர் அஜய்பூஷன் பாண்டே, “பெரு நிறுவனங்களுக்கான வருமான வரி திரும்ப அளிக்கும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது.  கடந்த சில வாரங்களில் ரூ.35000 கோடி வரை வருமான வரி திரும்ப அளிக்கப் பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.