ஆதார் எண்ணுடன் வருமான வரி பான் கார்டை இணைக்கும் தேதி அடுத்த வருடம் மார்ச் 31 வரை நீட்டிப்பு

வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை (PAN) ஆதார் எண்ணுடன் இணைக்கும் தேதியை அடுத்த வருடம்  மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் நேற்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

கடந்த 2017-18-ல் மத்திய அரசு கொண்டு வந்த திருத்தத்தின்படி, வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யும்போது, ஆதார் எண்ணையும் குறிப்பிடுவது கட்டாயமாகும்.  அதாவது, பான் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைப்பது அவசியம்.

இதன் மூலம், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்து, வரி ஏய்ப்பு செய்வதைத் தடுக்க முடியும்  என்று தெரிவிக்கப்பட்டது.

 

ஆகவே, பான் எண் வைத்திருப்போர் அனைவரும், தங்கள் ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும்” என்று மத்திய வருவாய்த்துறை அறிவித்தது.

இதற்கிடையில், ஆதார் அட்டைக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் உள்ளதா என்பது தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.

இதனால், ஆதார் எண்ணுடன் வருமான வரி பான் கார்டை இணைக்கும் கடைசி தேதி 31-7-2017, 31-8-2017, 31-12-2017, 31-3-2018 என நான்கு முறை நீட்டிக்கப்பட்டது. இறுதியாக 30-6-2018 வரை தேதி நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்தது.

இந்த நிலையில், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை (PAN) ஆதார் எண்ணுடன் இணைக்கும் தேதியை அடுத்த வருடம் மார்ச் 31-ம் தேதி (31-3-2019) வரை நீட்டித்து மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.