டெல்லி:

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் என்னுடன் இணையுங்கள் என்று மாணவர் களுக்கும், இளைஞர்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை 3 மணி அளவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தலைமையில் மாபெரும் போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு மாணவர்கள், இளைஞர்களுக்கு ராகுல் காந்தி டிவிட்டர் மூலம்  அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியின் ராஜ்காட் பகுதியில் இன்று மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற உள்ள , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க வருமாறு மாணவர்கள், இளைஞர்களுக்கு  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

அதில்,  “அன்புள்ள மாணவர்களே, இளைஞர்களே,  நீங்கள் இந்தியர்களாக உணர இது போதுமானது இல்லை… இதுபோன்ற தருணத்தில், நீங்கள் இந்தியர்கள் என காட்டுவதோடு மட்டுமல்லாமல், வெறுப்புணர்வால் இந்தியாவை அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை வெளிக்காட்டுவது மிகவும் முக்கியமானது. 

மோடி-ஷா இந்தியா மீது கட்டவிழ்த்துவிட்ட வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, இன்று மாலை 3 மணிக்கு ராஜ்காட்டில் நடைபெறும் போராட்டத்தில் என்னுடன் இணையுங்கள்” என்று  அழைப்பு விடுத்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் டிவிட்டர் பதிவில், “அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்க ராஜ்காட்டில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். இந்த தேசம் அனைத்து மக்களின் உணர்வுகளால், கனவுகளால் பின்னப்பட்டது. கடினமான உழைப்பால் இந்த தேசத்தை உருவாக்கி இருக்கிறோம். பிரித்தாலும் அரசியல், பிரித்தாலும் ஆட்சியில் இருந்து நாட்டைப் பாதுகாக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.