சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை : மேனகா காந்தி

டில்லி

ந்திய சட்டத்தில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரணதண்டனை வழங்கும் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

தற்போது நாடெங்கும் சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.   காஷ்மீரை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நாடெங்கும் கொந்தளிப்பை உண்டாக்கி உள்ளது.   சூரத் நகரில் 11 வயது சிறுமியின் சடலம் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.   இந்த குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை தரப்பட வேண்டும் என நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, “நாட்டில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது மிகவும் வேதனையை உண்டாக்கி வருகிறது.    தற்போதுள்ள சட்டப்படி இந்த குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை மட்டுமே அதிகபட்சமாக வழங்கப்பட முடியும்.   அதனால் சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை வழங்கக் கோரி சட்டத் திருத்தம் செய்ய எனது அமைச்சகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

அதன் படி விரைவில் சட்டத் திருத்தம் ஏற்படுத்தப் படும்.   பலாத்கார குற்றம் என்பது மிகவும் கொடூரனாமானது.   உத்திரப் பிரதேசத்தில் மைனர் பெண் பலாத்கார வழக்கு பதியப்பட்டுள்ளது.   அதில் சம்பந்தப்பட்டவர் சட்ட மன்ற் உறுப்பினர் என சொல்லப்படுகிறது.   யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து யாரும் தப்ப முடியாது.    இந்த விவகாரத்தில் மத்திய அரசு எவ்வித சமரசமும் செய்துக் கொள்ளாது”  என தெரிவித்துள்ளார்.