வடக்கு சீனாவில் உணவகம் இடிந்து விழுந்த விபத்தில் 29 பேர் உயிரிழப்பு

சியாங்ஃபென்:
சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தின் உள்ள உணவகம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 29 பேர் உயிரிழந்தனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் குறைந்துள்ளதை தொடர்ந்து அங்குள்ள வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இதனிடையே நேற்று சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தின் சியாங்ஃபென் கவுண்டியில் உள்ள ஒரு உணவகத்தில் 80 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு மாடி அடுக்குகள் கொண்ட உணவகத்தில் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. அப்போது கட்டடம் முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் சிக்கினர். இதனை அடுத்து தகவலறிந்து வந்த மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை வரை நீட்டித்த இந்த மீட்புப் பணியை தொடர்ந்து விபத்தில் சிக்கி 29 பேர் உயிரிழந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனாவில் கடந்த சில மாதங்களாக கட்டட விபத்து சம்பவங்கள் ஆதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதேபோல் மார்ச் மாதத்தில் தெற்கு சீனாவின் குவான்ஜோ நகரில் ஒரு உணவகம் இடிந்து விழுந்த விபத்திலும் 29 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.