தூத்துக்குடி :

ன்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

போலீசாரின் அத்துமீறிய துப்பாக்கி சூட்டில் பிற்பகல் வரை 8 பேர் பலியான நிலையில், மாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மேலும் 3 பெண்கள் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

பொதுமக்களின் போராட்டத்தை ஒடுக்க  முயன்ற காவல்துறையினர் கண்மூடித்தனமாக பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

பொதுவாக முட்டுக்கு கீழே சுட வேண்டிய காவல்துறையினர் பொதுமக்களின் நெஞ்சுக்கு குறி வைத்தே துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.  பகலில்  3 முறையும், மாலையில் ஒரு தடவையும் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.

போலீசாரின் மூர்க்கத்தனமான இந்த செயல் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10ம்வகுப்பு மாணவி உள்பட 3 பெண்களும் அடக்கம்.

மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில், சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபி விஜயகுமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில், தென்மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், மதுரை சரக டி.ஐ.ஜி., பிரதீப்குமார், நெல்லை சரக டிஐஜி கபில்குமார் பாராஸ்கர் மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி-க்கள் பங்கேற்றனர்.

போலீசாரின் துப்பாக்கி சூடு காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பதற்றம் நீடித்து வருகிறது.