ஊரடங்கு தளர்வு – மெக்ஸிகோவில் 3 மடங்கு அதிகரித்த மரண எண்ணிக்கை!

மெக்ஸிகோ சிட்டி: கடந்த ஜூன் 1 முதல் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதிலிருந்து, மெக்ஸிகோவில் கொரோனா மரண எண்ணிக்கை 3 மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் அண்டை நாடான மெக்ஸிகோவில் 10167 என்பதாக இருந்த மரண எண்ணிக்கை, ஜூலை 9ம் தேதி நிலவரப்படி, 32796 என்பதாக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கையும் 194% அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள்‍ தெரிவிக்கின்றன.

அதாவது, 93435 என்பதாக இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை 275003 என்பதாக அதிகரித்துள்ளது.

ஊரடங்கு விஷயத்தில் தளர்வை அறிவித்தால், மெக்ஸிகோவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்ற எச்சரிக்கையையும் மீறி, அந்நாட்டு அரசாங்கம் முடிவுகளை மேற்கொண்டது. அதேசமயம், மெக்ஸிகோ அரசு தரப்பில் வெளியிடப்படும் பாதித்தோர் மற்றும் மரணமடைந்தோர் எண்ணிக்கையிலும் மாறுபாடுகள் உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும், மெக்ஸிகோவின் வடபகுதியில், அமெரிக்க எல்லையை ஒட்டி வாழும் மக்கள், அமெரிக்காவிலிருந்து யாரும் எல்லைத் தாண்டி வர வ‍ேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.