சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கு வரும் 27, 30ம் தேதிகளில் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி, பல வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. நீண்ட கால முயற்சிக்கு பின்னர் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான அறிவிப்பை, தேர்தல் ஆணையர் பழனிசாமி வெளியிட்டார். அதன்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பின்னர் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

டிசம்பர் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, டிசம்பர் 13 வரை நடைபெற்றது. 2 லட்சம் பேர் மனுத்தாக்கல் செய்ய, பின்னர் வேட்பாளர் பட்டியலும் வெளியானது.

இந் நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கு வரும் 27, 30ம் தேதிகளில் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.