மும்பை: ஐபிஎல் நிர்வாக அமைப்பிற்கு எதிரான மத்தியஸ்த வழக்கில், டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியுள்ளார் மும்பை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தரான ஓய்வுபெற்ற நீதிபதி சிகே தக்கார்.
இந்த தீர்ப்பின்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், பழைய டெக்கான் சார்ஜர்ஸ் அணி நிர்வாகத்திற்கான இழப்பீடாக ரூ.4800 கோடி வழங்க வேண்டும். இந்தாண்டு செப்டம்பரில் இந்த இழப்பீட்டை வழங்கியாக வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
இந்தத் தொகையுடன் வட்டியையும் சேர்த்தால், ரூ.8000 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெக்கான் சார்ஜர்ஸ் என்ற பெயரிலான ஐபிஎல் அணியை, டெக்கான் கிரானிக்கல் செய்தி நிறுவனம் நடத்தியது. அந்நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதையடுத்து, டெக்கான் கிரானிக்கல் நிறுவன ஒப்பந்தத்தை நீக்கியது பிசிசிஐ.
இந்த நடவடிக்கையை, சட்டவிரோதம் என்று கூறி, டெக்கான் சார்ஜர்ஸ் நிர்வாகம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கை விசாரிக்க, மும்பை உயர்நீதிமன்றத்தால் ஒரு மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தீர்ப்பு, பிசிசிஐ அ‍மைப்பிற்கு கடும் பின்னடைவாக கருதப்படுகிறது.