தமிழக மக்களின் இதய தெய்வமாகவும், மூன்றெழுத்து மந்திரத்துக்கு சொந்தக்காரராக திகழ்ந்தவருமான முன்னாள் தமிழக முதல்வர்  எம்ஜிஆரின் 32வது நினைவு தினம் இன்று…

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இயற்பெயர் கொண்டவர், திரையுலகுக்காக தனது பெயரை எம்.ஜி.ஆர் என்று சுருக்கி வைத்துக்கொண்ட நிலையில், அந்த மூன்றெழுத்தே தமிழக மக்களின் தாரக மந்திரமாக ஒலிக்கத் தொடங்கியது.  அவர் மறைந்து 32 ஆண்டுகள் ஆகியும், இன்றுவரை அவரது திரையுலக சாதனைகளை புகழாதவர்கள் யாரும் இல்லை…

நாடகத்துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த எம்.ஜி.ஆர். திமுகவில் இணைந்து தமது அரசியல் வழ்க்கைக்கான பாதையமைத்துக் கொண்டார். அவருடைய திரைப்படப் புகழால் கட்சியும் வளர்ந்தது. அண்ணாதுரையின் இதயக்கனியாக இடம் பிடித்தார். அன்பு, அறம், நேர்மை, உழைப்பு ஆகிய குணங்களை போற்றியே அவரது பாத்திரங்கள் உருவாகின.

தாய்ப்பாசம், குழந்தைகளுடன் நேசம் ஆகிய குணங்களையும் ரசிகர்கள் ஆர்வமாக ஏற்றுக் கொண்டார்கள். தமிழக மீனவர்களின் துயர வாழ்க்கையை அன்றே படகோட்டி படம் மூலம் பதிவு செய்தவர் எம்.ஜி.ஆர்.விவசாயி, தொழிலாளி, ரிக் ஷாக்காரன், மீனவர், நரிக்குறவர் என அடித்தட்டு மக்களின் பிரதிநிதியாக சினிமாவில் முத்திரை பதித்து தமிழக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்துக்கொண்டார்.

நடிகராக மட்டுமின்றி மிகச்சிறந்த இயக்குனராகவும் எம்ஜிஆர் நாடோடி மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களில் பெயரெடுத்தார்.

திமுகவில் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த இயக்கத்திற்கு எதிராக அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆருக்கு கடுமையான எதிர்ப்புகளை திமுக ஏற்படுத்தியது.  இருந்தாலும் அப்போது நடைபெற்ற  திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றது.

எம்ஜிஆர் மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்து வந்த எம்ஜிஆர் ஆட்சி ஏழை எளிய மக்களுக்கு பொற்காலமாகவும், அதேவேளையில், அவரை நம்பி வந்தவர்களுக்கு புகழிடமாகவும் இருந்தது.

இறுதிகாலத்தில்,உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்க புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்ஜிஆர், முதலமைச்சராக வெற்றிவாகை சூடினாலும் 1987ம் ஆண்டில் டிசம்பர் மாதம் 24ந்தேதி காலமானார்.

எம்ஜிஆர்  காலமாகி, கால் நூற்றாண்டுகளை கடந்தும், எம்ஜிஆர் என்ற  மூன்றெழுத்து மந்திரம், இன்றும் தமிழக மக்களால்  பேசப்பட்டு வருகிறது.

இன்று அவரது 32வது நினைவு நாள் அதிமுகவினரால் மாநிலம் முழுவதும் கொண்டாடப் பட்டு வருகிறது.  பல்வேறு பகுதிகளில், தெருவிற்கு தெரு, அவரின் புகைப்படத்தை வைத்து, மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தி மரியாதை செய்து வருகின்றனர்.