“சர்வதேச விமானங்களை இயக்குவது தொடர்பான முடிவு அடுத்த மாதம் எடுக்கப்படலாம்”

புதுடெல்லி: சர்வதேச விமானங்களை இயக்குவது தொடர்பான முடிவு, பங்குதாரர்கள் மற்றும் பயணிகளிடம் நம்பிக்கையை விதைத்தப் பிறகு அடுத்த மாதம் எடுக்கப்படலாம் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங்.

அவர் கூறியுள்ளதாவது, “வருகின்ற மாதத்தில், வெளிநாட்டு விமானப் போக்குவரத்தை துவக்குவது குறித்த முடிவுகள் மேற்கொள்ளப்படலாம் என்று நம்புகிறோம்.

அதேசமயம், இதுதொடர்பான காலஅளவை நிர்ணயிக்க நான் விரும்பவில்லை. ஏனெனில், அனைத்துப் பங்குதாரர்கள் மற்றும் பயணிகளின் மனநிலையையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது” என்றார்.

சில மாதங்கள் முன்பாக, விமானப் போக்குவரத்து துறையின் தலைமை இயக்குநர் கூறியிருந்ததாவது, “மார்ச் 23ம் தேதி அதிகாலை 1.30 தொடங்கி, மார்ச் 29ம் தேதி அதிகாலை 5.30 வரை வர்த்தகரீதியான சர்வதேச பயணிகள் விமானங்கள் இயக்கப்படாது. அதேசமயம், கொரோனா பரவலின் தாக்கத்தைப் பொறுத்து, இந்த தடை நீட்டிக்கப்படலாம்” என்றிருந்தார்.