கச்சா எண்ணெய் உற்பத்தியை பெருமளவில் குறைக்க முடிவுசெய்த நாடுகள்!

வியன்னா: கச்சா எண்ணெயை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்துவரும் நாடுகள், தங்கள் உற்பத்தியை இதுவரை இல்லாத அளவுக்கு குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் தாக்குதல் மற்றும் ரஷ்யா – சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையேயான விலை தொடர்பான போரினாலும், கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்தது.

இந்நிலையில், விலை அதிகரிக்கும் வகையில், உற்பத்தியை குறைக்கும் முடிவுக்கு இந்நாடுகள் வந்துள்ளன. இந்த முடிவினை அடுத்து, பிரன்ட் கச்சா எண்ணெய், ஒரு பேரலுக்கு 5% அதிகரித்து, 33.08 அமெரிக்க டாலராக திங்களன்று காலை உயர்ந்தது.

சவூதி அரேபியா தலைமையிலான ‘ஒபெக்’ என்ற அமைப்பும், ரஷ்யா தலைமையிலான கச்சாய் எண்ணெய் உற்பத்தி நாடுகள் அமைப்பும் காணொலி மூலமாக கலந்துபேசி, உற்பத்தியை குறைப்பது என்ற முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூட்டத்தில், பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள், மே மற்றும் ஜூன் மாதங்களில் அதிக அளவில் உற்பத்தியைக் குறைப்பது என்றும், அதன்பிறகு வரும் 2022ம் ஆண்டு வரை உற்பத்தியை மெல்ல மெல்ல அதிகரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.