கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை, தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் மமதா பானர்ஜி கூறி இருப்பதாவது:  நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125வது பிறந்த நாள் வரும் 2022ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. வங்கத்தின் சிறந்த தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரபோஸ் தேசியத்தின் கதாநாயகன்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராடியவர், நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியவர்களில் முக்கியமானவர். அனைத்து தலைமுறைகளுக்கும் உந்துசக்தியாக இருப்பவர். அவரது தலைமையின் கீழ், இந்திய தேசிய ராணுவத்தின் ஆயிரக்கணக்கான வீரர்கள் தாய்நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தனர்.

எனவே, மத்திய அரசானது ஜனவரி 23ம் தேதியை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும். மேலும் ஒரு சிறந்த தலைவரான நேதாஜி காணாமல் போனது தொடர்பான பிரச்னையில் உள்ள உண்மைகளை மக்கள் அறிய வேண்டும். அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் கோரி உள்ளார்.