பாட்னா:

பீகார் மாநிலம் பாட்னாவில் இந்திராகாந்தி இஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (ஐஜிஐஎம்எஸ்) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் ஊழியர்களிடம் திருமண நிலை குறித்த உத்தரவாத விண்ணப்பத்தை நிர்வாகம் கொடுத்து பூர்த்தி செய்து கொடுக்கும்படி கேட்டுள்ளது.

அந்த விண்ணப்பத்தில், உங்களுக்கு எத்தனை மனைவிகள் என்ற கேள்வியும் இடம்பெற்றுள்ளது. மேலும் நான் ஒரு பிரம்மச்சாரி/விதவை/கன்னி போன்ற விபரங்களும் கேட்கப்பட்டுள்ளது.

இந்த கேள்விகள் பெரும் சர்ச்யை ஏற்படுத்தியது. இது குறித்து துணை மருத்துவ கண்காணிப்பாளர் மனிஷா மண்டல் கூறுகையில்,‘‘இந்த கேள்வி நடைமுறை 1984ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. மத்திய பணிகள் விதிப்படி அனைவரும் இந்த விபரங்களை தெரிவித்தாக வேண்டும்.

இதே விண்ணப்பம் தான் டில்லி எய்ம்ஸிலும் பயன்படுத்தப்படுகிறது. மத்திய அரசு அல்லது எய்ம்ஸ் இந்த நடைமுறையை மாற்றினால் நாங்களும் மாற்றுவோம்’’ என்றார்.

எனினும் கன்னி குறித்த கேள்வி சரியானது இல்லை என்பதை அவர் ஒப்புக் கொண்டார். சமீபத்தில் புற்றுநோயால் இறந்த குழந்தையின் உடலை கொண்ட ஆம்புலன்ஸ் கொடுக்க மறுக்கப்பட்டதால் உடலை அவரது தந்தை 5 கி.மீ. தூரம் தோளில் தூக்கி சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையில் ஐஜிஐஎம்ஸ் சிக்கியது குறிப்பிடத்தக்கது.