ஷ்ராமிக் ரயில் கழிப்பறையில் புலம்பெயர் தொழிலாளி சடலம்: அழுகிய நிலையில் மீட்பு

ஜான்சி: உத்தர பிரதேசத்தில் ஷ்ராமிக் ரயில் கழிப்பறையில் புலம் பெயர் தொழிலாளி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அழைத்து சென்ற ஷ்ராமிக் ரயில் ஒன்று பயணத்தினை முடித்துக் கொண்டு ஜான்சி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த ரயிலை கிருமி நாசினி கொண்டு ஊழியர்கள் சுத்தம் செய்துகொண்டிருந்தனர்.  அப்போது இந்த சடலம் அழுகிய நிலையில் கழிப்பறையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

உயிரிழந்த நபர் மோகன்லால் ஷர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்டி மாவட்டத்தினை சொந்த ஊராக கொண்ட அவர், மும்பையில் தினக்கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்திருந்தார்.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக முன் அறிவிப்பின்றி அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையிழந்த கோடிக்கணக்கான தொழிலாளர்களில் இவரும் ஒருவர். எனவே தமது சொந்த மாநிலத்திற்கு இந்த ரயிலில் பயணித்துள்ளார்.

மோகன்லால் மற்றும் இதர பயணிகள் ஜான்சியை அடைந்தவுடன், கோரக்பூர் செல்வதற்காக அனுமதிக்கப்பட்டனர். ரயில் கோரக்பூருடன் நின்றுவிட்டதா அல்லது பீகார் வரை சென்றதா என்ற விவரங்கள் இல்லை. பின்னர் இதே ரயில் ஜான்சிக்கு திரும்பியதும் ரயில்வே ஊழியர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்த போது மோகன்லாலின் சடலத்தினை கண்டுபிடித்துள்ளனர்.

You may have missed