புதுச்சேரி வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணிக்கிறேன்: கவர்னர் கிரண்பேடி பிறந்தநாள் செய்தி

புதுச்சேரி:

புதுவை மக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணிப்பதாக கவர்னர் கிரண்பேடி தனது பிறந்த நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் பிறந்தநாள் என்பது நம்மை பெற்றெடுத்த அன்னையை நினைவுகூறும் தினம் என்றும்  கூறி உள்ளார்.

புதுச்சேரி  கவர்னர் கிரண்பேடிக்கு இன்று 69-வது பிறந்த நாள். இதன் காரணமாக கவர்னர் மாளிகை வளாகத்தில் உள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் கிரண்பேடி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

அதைத்தொடர்ந்து  கவர்னர் மாளிகை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிரண்பேடி,  பிறந்த நாள் என்பது நம்மை ஈன்றெடுத்த அன்னையை நினைவு கூரும் தினமாகும். நமக்கு பிறந்த நாள் என்பதை விட அன்னைக்கு மறுபிறவி என்பதே சரி என்று தெரிவித்தார்.

மேலும் தனது சேவையை புதுவை மக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கிறேன் என்றும் கூறினார்.

இவ்வாறு அவர் கூறினா.

கிரண்பேடி பிறந்தநாளையொட்டி அவருக்கு அரசியல் கட்சியினர், அதிகாரிகள், பொதுமக்கள் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்

முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர்  பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது சிறுவன் ஒருவன் கிரண்பேடிக்கு வாழ்த்து தெரிவிக்க வந்திருந்தான். அதைக்கண்ட கிரண்பேடி, அந்த சிறுவனை அருகில் வரவழைத்து தனது இருக்கையில் அமர வைத்து உற்சாகப்படுத்தி மகிழ்ச்சியாக தனது பிறந்தநாளை கொண்டாடினார்.