காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேற்கு மத்திய, தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது. அதன்படி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறி மேற்கு, வடமேற்கு நோக்கி நகரும் என்றும் வடக்கு ஆந்திர கடற்கரை நர்சபூர், விசாகப்பட்டினம் இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,. புயல் கரையை கடக்கும் போது கடல், அதிக சீற்றத்துடன் காணப்படும் என்றும் மணிக்கு 60 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிகளுக்கு செல்லகூடாது என்றும் எச்சரித்துள்ளது.

புயல் காரணமாக, ஆந்திராவில் 4 மாவட்டங்களுக்கு அதீத கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு ஒடிசா, மத்திய மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானாவிலும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.