மும்பை: தன் மீது அலாதிப் பிரியம் கொண்ட ஒரு பாகிஸ்தான் ரசிகர், தனக்கு தொடர்ச்சியாக கடிதம் கொடுத்தனுப்பிய நெகிழ்வான சம்பவத்தை பகிர்ந்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி.
இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் அரசியல்ரீதியான எதிரிகள் என்பதால், இருநாட்டு கிரிக்கெட் அணிகள் மோதும் ஆட்டத்திற்கு எப்போதுமே பரபரப்பு அதிகம். இந்நிலையில், வினோத் காம்ப்ளியின் தீவிர ரசிகராக இருந்த, கராச்சியை சேர்ந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், பாகிஸ்தான் அணி, இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்யும்போதெல்லாம், அந்நாட்டு விக்கெட் கீப்பர் ரஷித் லத்தீஃபிடம் கடிதம் கொடுத்து அனுப்புவாராம் அந்த ரசிகர்!
வினோத் காம்ப்ளி கூறியிருப்பதாவது, “நான் கடந்த 1991ம் ஆண்டு எனது கேரியரை துவங்கிய காலம் முதல் அந்த ரசிகர் என்னை பின்தொடர்கிறார். அப்போதெல்லாம் மொபைல், இன்டர்நெட் உள்ளிட்ட நவீன வசதிகள் இல்லை. எனவே, அந்த ரசிகர் தனது அன்பை, கடிதங்கள் மூலமே வெளிப்படுத்துவார்.
அவருக்கான மீடியம் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ரஷித் லத்தீஃப்தான். நான் பாகிஸ்தானுக்கு ஆடச் சென்றிருக்கையிலும் அந்த ரசிகர் என்னைப் பின்தொடர்வார். நான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப‍ெற்ற பிறகும், அவரின் அன்பு என்மீது தொடந்தது” என்றுள்ளார் காம்ப்ளி.