”ஜெயலலிதா வீட்டில் ஒரு பொருளை கூட தொட விடமாட்டோம்.”
சென்னை போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல் –அமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டை அரசுடைமையாக்கத் தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ள நிலையில், ‘’ அந்த இல்லம் எனக்கே சொந்தம்’’ என மீண்டும் உரிமை கோரியுள்ளார், ஜெயலலிதாவின் மருமகள் ஜெ. தீபா.
இவர், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் ஆவார்.
‘’ எனது அத்தைக்கு ( ஜெயலலிதா) மெரினா கடற்கரையில் ஏற்கனவே நினைவு இல்லம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வேதா இல்லத்தையும் ( ஜெயலலிதா வீடு) ஏன் நினைவு இல்லம் ஆக்க வேண்டும்?’’ என்று தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.
‘ ஜெயலலிதாவின் வாரிசுகளான என்னிடமும் , என் அண்ணனிடமும் தான் அந்த இல்லத்தை ஒப்படைக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ள தீபா, ‘’ இது தொடர்பான எங்கள் சட்ட போராட்டத்துக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
‘கொரோனாவால் நாடே பெரும் நெருக்கடியில் சிக்கி இருக்கும் போது, எனது அத்தை வீட்டை அவசரச் சட்டம் போட்டு ஏன் அரசுடைமையாக்க வேண்டும்?’’ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
’’ ஜெயலலிதா வீட்டில் உள்ள எந்த பொருள் மீதும் எடப்பாடி பழனிச்சாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ கை வைக்க விட மாட்டேன்’’ என்றும் தீபா சூளுரைத்துள்ளார்
– ஏழுமலை வெங்கடேசன்