எனது அரசியல் பிரவேசத்தை பிரபல பத்திரிக்கைகள் எதிர்க்கின்றன!: தீபா குற்றச்சாட்டு

“நான் அரசியலுக்கு வருவதை பலர் எதிர்க்கின்றனர். பிரபல பத்திரிக்கைகள் , வலைதளங்களும் நான் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை” என்று தீபா குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

“புதிய அமைப்பு தொடங்குவது குறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்டு வருகிறேன். தொண்டர்களும்  மக்களும் விருப்பபட்டால்  நிச்சயமாக அனைத்து தேர்தல்களிலும் ஈடுபடுவோம்.

நான் முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன். என்னை நம்பி இருக்கும் தொண்டர்களை ஏமாற்ற மாட்டேன்.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கவே மெரினாவுக்கு சென்றேன். ஆனால் அப்போது  என்னைப்பற்றி தவறான தகவல் பரப்பபட்டது.

சமூக வலைதளங்களிலும் , பிரபல பத்திரிக்கைகளிலும் எனக்கு எதிராக எழுதிவருகிறார்கள். அவர்கள்,  நான் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை இது வருத்ததை ஏற்படுத்துகிறது.  இளைஞர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க கூடாது.

என்ன ஆனாலும் நான் அரசியலைவிட்டு விலக மாட்டேன். தொண்டர்கள் கருத்தை முழுமையாக அறிந்த பிறகு உறுதியான முடிவை அறிவிப்பேன்” என்று தீபா தெரிவித்தார்.