சசிகலாவுடன் பேரம் பேசும் தீபா?!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கட்சியினர் பொதுநல ஆர்வர்கள் என பலரும் பேசி வருகிறார்கள். இவர்களில் டிராபிக் ராமசாமி, பி.ஏ.ஜோசப் டி.ராமசாமி. உட்பட சிலர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள், தற்போது இந்த விவகாரம், மனித உரிமை ஆணையம் வரை சென்றுவிட்டது. நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகள், தீபா, ஜெ. மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து பேசி வருகிறார். தொண்டர்கள் விரும்பினால் அரசியலுக்கு வர தாயராக இருப்பதாகவும் சொல்லிவருகிறார்.

இந்த சூழலில், “ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கொன்றில் “ஜெயலலிதாவின் ரத்த உறவுகள் சந்தேகம் எழுப்புகிறார்களா” என்ற கேள்வி எழுப்பட்டிருக்கிறது. ஆனால் ஜெயலலிதாவின் ரத்த உறவான அவரது அண்ணன் மகள், இதுவரை நீதிமின்றத்தில் இது குறித்து முறையிடவில்லை. இது ஏன்” என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இது குறித்து சசிகலா மற்றும் தீபா வட்டாரங்களில் விசாரித்த போது  சிலர் கூறிய தகவல்கள் அதிர வைக்கின்றன.

அவர்கள் சொல்வது இதுதான்:

“ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக இன்றும்  பலர் பேசி வருகிறார்கள். தனிப்பட்ட முறையில் மட்டுமின்றி சமூகவலைதளங்களிலும் இது குறித்து பேசப்படுகிறது. மலேசியாவில் வெளியாகும் இதழ்கள் சில, வெளிப்படையாகவே ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என எழுதி வருகின்றன.

இந்த நிலையில் தீபா வெளிப்டையாக பேச மறுப்பதும், ஜெ. உறவினர்கள் வழக்கு தொடுப்பது பற்றி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட பிறகும் நீதிமன்றத்தை நாடாததும் ஏன் என்ற கேள்வி எழுவது இயல்புதான்.

இது பில்லியன் டாலர் கேள்வி.

தற்போது தீபா, “ஜெயலலிதா வசித்த போயஸ் இல்லம், எனது பாட்டி சந்தியா வாங்கியது. அது எனக்குத்தான் சொந்தம். அங்கு வசிக்க சசிகலாவுக்கு உரிமை இல்லை” என்கிற ரீதியில் பேசி வருகிறார்.

ஆனால் தீபாவின் நோக்கம், அந்த போயஸ் இல்லம் மட்டுமல்ல. ஜெயலிதா பெயரில் மிக மதிப்பு வாய்ந்த… பல்வேறு சொத்துக்கள் இருக்கின்றன.

ஜெ., சசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வராத சொத்துக்களும் உள்ளன.  இந்த சொத்துக்களில் சரிபாதி பங்கு வேண்டும் என சசிகலா தரப்பிடம் கேட்டிருக்கிறார் தீபா. ஆனால் சசிகலா தரப்பில்  சாதகமான பதில் வரவில்லை.  ஆனாலும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்.

ஆகவேதான், ஜெயலலிதாவின் ரத்த உறவான இவர்,  இதுவரை ஜெ. மரணம் குறித்து  நீதிமன்றத்தை நாடவில்லை. அப்படி இவர் நீதிமன்றத்தை நாடினால், நிச்சயமாக ஒரு தீர்வு கிடைக்கும். ஆனால் இதை தீபா தவிர்க்கிறார்” என்கின்றன அந்த வட்டாரங்கள்.

இது குறித்து தீபாவின் கருத்தை அறிய அவரது இரண்டு எண்களிலும் தொடர்புகொண்டோம். இரண்டும் நாட் ரீச்சபிள்.

தீபாவின் உதவியாளர் என்று சொல்லிக்கொண்டு, தீபாவின் வீட்டு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சரவணன் என்பவரின் எண்ணுக்கும் தொடர்புகொண்டோம். அவரோ, தொடர்ந்து, “பிஸியா இருக்கிறேன்.. பிறகு பேசுங்கள்” என்கிறார்.

ஜெயலலிதாவின் ரத்த உறவான தீபா, நீதிமன்றத்தை ஏன் நாடவில்லை என்பதற்கும், சசிகலாவுடன் ரகிசிய பேரம் நடக்கிறதா என்பதற்கும் பதில் அளித்தால் பிரசுரிக்க தயாராக இருக்கிறோம்.