புதுச்சேரியில் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்! நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும்  தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மாநிலம் மற்றும் மத்தியஅரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து வருகிறது. இந்த நிலையில், புதுவை அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு இருப்பதாக மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து முதல்வர்  நாராயணசாமி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவை மாநில அரசில் பணிபுரியும் பிரிவு ‘பி’ மற்றும் ‘சி’ ஊழியர்களுக்கு 2019-20-ம் ஆண்டுக்கான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க நிதித்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, மாநில அரசில் பணிபுரியும் உற்பத்தி சம்மந்தப்பட்ட போனஸ் பெறாத பிரிவு ‘பி’ (அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள் தவிர்த்து) மற்றும் பிரிவு ‘சி’ ஊழியர்கள், முழுநேர தற்காலிக ஊழியர்கள், 2019-20-ம் ஆண்டுக்கான போனஸ் வழங்குவதற்கான கோப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன் மூலம் பிரிவு ‘பி’ மற்றும் ‘சி’ ஊழியர்களுக்கு போனசாக ரூ.6,908 மற்றும் முழுநேர தற்காலிக ஊழியர்களுக்கு ரூ.1,200-ம் வழங்கப்படும்.

இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் முழுநேர தற்காலிக ஊழியர்கள் 26 ஆயிரம் பேர் பயனடைவர். இதன் காரணமாக புதுவை அரசுக்கு ரூ.18 கோடி கூடுதலாக செலவாகும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.