தீபாவளி நெரிசல் : ட்ரோன் மூலம் தி நகரில் காவல்துறை கண்காணிப்பு

சென்னை

சென்னை தியாகராய நகரில் தீபாவளிப் பண்டிகை முன்னிட்டு கடும் மக்கள் நெரிசல் உள்ளதால் ட்ரோன் காமிராக்கள் மூலம் காவல்துறை கண்காணிப்பு செய்து வருகிறது.

சென்னை நகரில் மிகவும் நெரிசலான பகுதியான தியாகராய நகரில் தற்போது தீபாவளி காரணமாக கடும் மக்கள் நெரிசல் உள்ளது. இந்தப் பகுதியில் ஏராளமான துணிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் பாத்திரக் கடைகள் உள்ளதால் எப்போதுமே நெரிசலாக இருக்கும். இந்த பண்டிகை சீசனில் கட்டுக்கடங்காத அளவில் மக்கள் தியாகராய நகருக்கு வருகின்றனர்.

அதை ஒட்டி சென்னை மாநகர காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சிசிடிவி காமிராக்கள் மூலம் தியாகராய நகர் முழுவதுமே கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இது குறித்து தியாகராய நகர் காவல்துறை துணை ஆணையர் அரவிந்தன், “தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் சென்னை தியாகராய நகரில் மக்கள் அதிக அளவில் குவிகிறனர். எப்போதும் நெரிசலாக உள்ள தி நகரில் தற்போது நெரிசல் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

மக்கள் அதிகம் நடமாடும் ரங்கநாதன் தெரு, உஸ்மால் சாலை, பாண்டி பஜார் பகுதிகளில் கொள்ளையர்கள் நடமாட்டமும் அதிகம் உள்ளது. எனவே அவர்களை கண்காணிக்கவும் மக்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்தவும் இந்த இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கோபுரங்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். சுமார் 1200 க்கும் மேற்பட்ட சிசிடிவி காமிராக்கல் மற்றும் ட்ரோன் காமிராக்கள் மூலம் கண்காணிப்பு நடைபெறுகிறது” என தெரிவித்துள்ளார்.