தீபாவளி பண்டிகை: நவம்பர் 5ந்தேதி வரை ரேசன் கடைகள் விடுமுறையின்றி இயங்கும்

சென்னை:

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பொருட்கள் வாங்கும் வகையில்,  நவம்பர் 5ந்தேதி வரை ரேசன் கடைகள் விடுமுறையின்றி இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

வரும் 6ந்தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கும் வகையில், இன்று முதல் வரும் 5ந்தேதி வரை விடுமுறை இன்றி  ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உணவுப்பொருள் வழங்கல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை, 4 நாட்கள் தொடர்ந்து அனைத்து நியாயவிலை கடைகளும் வழக்கம் போல் செயல்பட ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாயவிலை கடைகளுக்கு, வழக்கமாக, விடுமுறை நாளான முதல் வெள்ளிக்கிழமை, அதாவது வருகிற 2ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மூன்றாவது வெள்ளிக் கிழமையான 16ஆம் தேதி நியாயவிலை கடைகளுக்கும் விடுமுறை நாளாகும் எனக் கூறப்பட்டுள்ளது.