சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊருக்குச்செல்லும் பயணிகளின் வசதிக்காக,  சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில்  5 இடங்களில் இருந்து  பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 14ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 14,757  சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தற்போதைய நிலையில், குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் நிலையில்,  தீபாவளி பண்டிகையையொட்டி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக தமிழக போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.

அதன்படி சென்னையின் 5 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி,   மாதவரம், கே.கே. நகர், தாம்பரம் மெப்ஸ் மற்றும் தாம்பரம் ரயில்வே பேருந்து நிலையம்   பூவிருந்தவல்லி  மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சிறப்பு பேருந்துகள்  வரும் 11ந்தேதி முதல் 13ந்தேதி வரை இயக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதற்காக சென்னையில் எ 13 முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு 14,757 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும்,  தீபாவளிக்குப் பிறகு ஊர் திரும்ப 16,026 பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும்,   கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு குறைவாகவே இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

சிறப்பு பேருந்துங்கள் இயக்கப்படும் இடம் விவரம்

ஆந்திரா மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

வேலூர், காஞ்சிபுரம், ஓசூர் மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

திருவண்ணாமலை செல்லக்கூடிய பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து  இயக்கப்படும்.

தாம்பரம் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், விக்கிரவாண்டி வாயிலாக செல்லக்கூடிய பேருந்துகள்  இயக்கப்படும்.

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லக்கூடிய பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தொலைதூரம் செல்லக்கூடிய மதுரை, திருநெல்வேலி, கோவை, ராமநாதபுரம் போன்ற ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.