சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதால் வண்டலூர்  கிளாம்பாக்கத்தில் அடிப்படை வசதிகளுடன் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கிளாம்பாக்கம் பகுதியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து கட்டப்பட்டு வரும் நிலையில், தற்போ  உள்ளூர் பேருந்து நிறுத்த பகுதியில் மக்கள் வசதிக்காக தற்காலிகமாக சிறப்பு பேருந்துகள் நிறுத்தம் தயாராகி வருகிறது.

இதுகுறித்து தமிழக போக்குவரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ள கோயம்பேடு உள்ளிட்ட 5 பேருந்து நிலையங்களில் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறை, மாநகராட்சி, உள்ளாட்சித் துறையுடன் இணைந்துபணிகளை மேற்கொள்ள உள்ளது.

பேருந்துகள், பேருந்து நிலையங்கள் கிருமிநாசினி தெளித்து, தூய்மைப்படுத்தப்படுவதுடன், பயணிகள் சமூகஇடைவெளியுடன் செல்ல உரிய ஏற்பாடுகளை செய்துவரப்படுகிறது.

பயணிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதித்த பிறகே பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கப்படும்.

சென்னை புறநகர் மக்கள் விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து, வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்தே பயணம் செய்ய பயணிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்து வரப்படுகிறது. தற்போதுள்ள மாநகர பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பேருந்து நிலையத்தில் பயணிகள் வந்து செல்ல வசதியாக, நடைமேடைகள் அமைத்தல், நிழற்குடைகள் அமைப்பது, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தற்காலிக தீயணைப்பு மையங்கள், பயணிகள் குறைதீர் போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இங்கிருந்து மாநகரின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் வகையில் மாநகர பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதேபோல், ஆம்னி பேருந்துகளும் இந்த பேருந்து நிலையம் உள்ளே வந்து செல்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.