அவதூறு வழக்கு: பிரேமலதாவுக்கு ஜாமின்
திருப்பூர்:
அவதூறு வழக்கில் கைது செய்யாமல் இருக்க பிரேமலதாவுங்கு ஜாமின் வழங்கியது திருப்பூர் நீதிமன்றம்.

திருப்பூரில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா, முதல்வர் ஜெயலலிதா பற்றி அவர் அவதூறாக பேசியதாக, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பிரேமலதா விஜயகாந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கிற்காக என்னை கைது செய்யக்கூடாது என பிரேமலதா சென்னை ஐகோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். ஆனால், ஐகோர்ட்டு, திருப்பூர் கோர்ட்டில் ஆஜராகி ஜாமின் பெற்றுக்கொள்ளலாம் என கூறியதையடுத்து, இன்று திருப்பூர் கோர்ட்டில் ஆஜராகி ஜாமின் பெற்றார்.
இதுபற்றி பிரேமலதா கூறியதாவது- முன்னாள் அமைச்சரால் போடப்பட்ட பொய் வழக்கு இது. நாங்கள் சட்டத்தை மதித்து இன்று கோர்ட்டில் ஆஜராகி உள்ளோம்.
தமிழக பட்ஜெட் வரி இல்லாத பட்ஜெட்டாக இருந்தாலும் ஏற்கனவே 1 லட்சம் கோடி கடனில் உள்ளது. அதுவே மக்களுக்கு வலியை ஏற்படுத்தக்கூடியதுதான்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக கண்டிப்பாக முரசு சின்னத்தில் போட்டியிடும். சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் தொகுதி பங்கீடுதான் செய்திருந்தோம். அது முடிந்து விட்டது. உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் விஜயகாந்த் அறிவிப்பார் என்றார்.