புதுடெல்லி: டெல்லி மாநில பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ராவின் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கை முடித்து வைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
டெல்லி மாநில ஆம் ஆத்மி அரசில் சுகாதார அமைச்சராக பதவி வகிக்கும் சத்யேந்தர் ஜெயின், இந்த அவதூறு வழக்கை கபில் மிஸ்ரா மீது தொடுத்திருந்தார்.
முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு லஞ்சம் கொடுத்தார் சத்யேந்தர் ஜெயின் என்று குற்றம் சுமத்தியிருந்தார் கபில் மிஸ்ரா. இதனை எதிர்த்துதான் அவதூறு வழக்கு தொடுத்திருந்தார் சத்யேந்தர்.
ஆனால், தற்போது தனது முந்தையக் குற்றச்சாட்டு குறித்து நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுள்ளார் கபில் மிஸ்ரா. இத்தகைய தவறு மீண்டும் நிகழாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதை அவர் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்தும், தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதளப் பக்கத்தில் இதைப் பதிவிடுவதாக கூறியதையடுத்தும், தனது வழக்கை திரும்பப் பெற்றார் சத்யேந்தர். இதனையடுத்து, இவ்வழக்கை முடித்து வைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.