சென்னை: தமிழகஅரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை ஆட்சியர் அலுவலகத்திலுள்ள எம்பி மற்றும் எம்எல்ஏ-க்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

கடந்த ஜனவரி மாதம் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்ட  திருமண நிகழ்ச்சியில் பேசும்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியிருந்தார். மேலும், அதிமுக அரசின் அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதன் காரணமாக, ஸ்டாலின் மீது , தமிழகஅரசு சார்பில் 6  அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த 6 வழக்குகளில் 4 வழக்குகள் இன்று  சென்னை  சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, வழக்கில் ஆஜராக மு.க.ஸ்டாலினுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டது.  இதையடுத்து, மு.க.ஸ்டாலின் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

 ஏற்கனவே அவதூறு வழக்குகளில் சென்ன உயர்நீதிமன்றம், மு.க. ஸ்டாலினை  கண்டித்துள்ளது. அப்போது, அரசியல் கட்சித் தலைவர் பொறுப்புடன் பேச வேண்டும் என்றும் பொதுவெளியில் தமிழக முதல்வர் குறித்து உண்மைக்கு புறம்பாக பேசுவது மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அறிவுரை கூறியது குறிப்பிடத்தக்கது.