ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

சென்னை:

தமிழகத்தில்  அவதூறு வழக்குகள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் தொடங்கப் பட்டுள்ள நிலையில்,  அதில் முதல் வழக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விசாரணை நடைபெற்றது.

இதற்கு தடை விதிக்க கோரி மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க சிறப்பு நீதி மன்றத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தாக தமிழக அரசு சார்பில், கடந்த செப்டம்பர் மாதம் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.  சேலம் மாநகர காவல்துறையினரால் தொடரப்பட்ட  இந்த வழக்கு,  எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் வழக்கை விசாரிக்கும் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது அரசு தரப்பில் வாதாடும்போது, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வரின் மாண்புக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும்,  அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் வாதாடினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து வாதிட்ட ஸ்டாலின் வழக்கறிஞர்,  ‘முதல்வருக்கு எதிராக தனிப்பட்ட முறையில்தான் ஸ்டாலின் விமர்சனம் செய்தார். முதல்வரின் பதவிக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் இல்லை என கூறினார்.

இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.