பெங்களூரு: 5 ஆண்டுகளில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி ரூ.2 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற ஸ்டார்ட் அப் மந்தன் என்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.  நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று 384 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

பாதுகாப்பு உற்பத்தி துறையில் புதிதாக நுழையும் ஸ்டார் அப் நிறுவனங்களுக்கு தேவை என்ன என்பதை உணர்ந்து மத்திய அரசு செயல்படுகிறது. ஏரோ இந்தியா 2021ம் கண்காட்சியில் 45 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் 203 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை பெற்றுள்ளன.

2015-2020க்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில் மட்டும் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி ரூ.2 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. நமது உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தி 2025ம் ஆண்டுக்குள், 2,500 கோடி அமெரிக்க டாலராகவும், அவற்றின் ஏற்றுமதி 500 கோடி அமெரிக்க டாலராகவும் உயர்த்த இலக்குகளை கொண்டுள்ளது.

இந்த இலக்கை நாம் எட்டிவிட்டால் ஏவுகணை, ராணுவ விமானம், வர்த்தக விமானம் உள்ளிட்ட வான்வெளி துறை முக்கிய பங்கு வகிக்கும்.  ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் நம்முடைய பொருளாதாரம் மேம்பாடு அடைய போகிறது என்று தெரிவித்தார்.