தமிழகத்தில் பாதுகாப்புத்துறை தொழில்பூங்கா அமைக்கப்படும்: பிரதமர் மோடி

சென்னை:

சென்னையை  அடுத்த  திருவிடந்தையில், ராணுவ தளவாட கண்காட்சியை  தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தமிழகத்தில் பாதுகாப்புத்துறை தொழில்பூங்கா அமைக்கப்படும் என கூறினார்.

தமிழகம் முழுவதும் மோடிக்கு எதிராக  இன்று கருப்புகொடி போராட்டம் நடைபெற்று வரும் பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் மோடி  தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை கவர்னர்,  முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் அவர் ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தைக்கு சென்றார். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், ராணுவ தளவாட கண்காட்சியை பிரதமர் முறைப்படி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, காலை வணக்கம் என்று  தமிழில் கூறி உரையைத் தொடங்கினார்.

தொடர்ந்த பேசிய மோடி, கடல்கடந்த வர்த்தகத்தில் சிறந்து விளங்கியது தமிழகம் என்றும்,  சோழர்களால் பெருமை பெற்ற மண் என்றும் கூறினார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக,  கடன் வணிகத்தில் தமிழகம் சிறந்த விளக்கியதாக கூறிய மோடி,  வேத காலத்திலிருந்தே அகிம்சையையும், உலக சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் நாடு இந்தியா எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமைதிக்கு அளிக்கப்படும் அதே அளவு முக்கியத்துவம், நாட்டு மக்களை காப்பதற்கும் அளிக்கப்படுகிறது என பேசிய மோடி, தமிழ்நாட்டிலும், உத்தரப்பிரதேசத்திலும் பாதுகாப்புத்துறை தொழில் பூங்கா அமைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதன் காரணமாக இந்தியா பொருளாதார வளர்ச்சியிலும், பாதுகாப்புத்துறை உற்பத்தியிலும் சிறந்து விளங்கும் என்றும்,   அனைவரும் கனவு காண வேண்டும் என அப்துல் கலாம் கூறியதை சுட்டிக்காட்டிய பிரதமர், கனவு, சிந்தனையாகவும், சிந்தனை செயலாகவும் மாற வேண்டும் என்று கூறினார்.

சிறிய அளவில் தொடங்கிய ராணுவ தளவாட உற்பத்தி, தற்போது இமாலய வளர்ச்சி அடைந்துள்ளது என்று கூறிய பிரதமர், ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய தொடங்கியது நமக்கு பெருமை என்றும்,. பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறினார்.

ராணுவ தளவாட உற்பத்தியில் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் 200% வளர்ச்சி அடைந்துள்ள தாகவும் பிரதமர் பெருமிதம் கொண்டார்.

இறுதியில் ”தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு” என திருக்குறள் கூறி பேச்சை நிறைவு செய்தார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Defence industrial park  will be set up in Tamil Nadu: PM Modi speech, தமிழகத்தில் பாதுகாப்புத்துறை தொழில்பூங்கா அமைக்கப்படும்: பிரதமர் மோடி
-=-