”பொய் சொன்ன நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்” – ராகுல்காந்தி

பாராளுமன்ற கூட்டத்தில் பொய் பேசியதால் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டுமென ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Nirmala

தற்போது நடைபெற்ற குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ரபேல் போர் ஒப்பந்தம் தொடர்பாக பல கேள்விகளை பிரதமர் மோடி மீதும், மத்திய அரசு மீதும் எழுப்பினார். இதனால் பாராளுமன்ற கூட்டம் காரசாரமாகவே நடைபெற்றது. 126 போர் விமானங்கள் தேவைப்படும் போது ஏன் 36 விமானங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டன? ஹெச்.ஏ.எல்.நிறுவனம் இருக்கையில் ஏன் அந்நிய நிறுவனத்தை மத்திய அரசு நாடியது ? அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை பரிந்துரைத்ததற்கான காரணம் என்ன ? என பல அடுக்கடுக்கான கேள்விகளை ராகுல் பாராளுமன்றத்தில் எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ ரபேல் விவகாரத்தில் உண்மையை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. உண்மையை மறைப்பதற்காகவே காங்கிரஸ் அமளியில் ஈடுபடுகிறது. நாட்டின் பாதுகாப்பிற்காகவே பாஜக அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. அதனால், ஹெச்.ஏ.எல். நிறுவனத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஆர்டர் தந்துள்ளோம் ” என கூறினார்.

இந்நிலையில் ஹெச்.ஏ.எல்.நிறுவனத்திற்கு ஒருலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஆர்டர் தந்ததாக பாராளுமன்றத்தில் பொய் உரைத்த நிர்மலா சீதாராமன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘ பாராளுமன்றத்தில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஹெச்.ஏ.எல். நிறுவனத்திற்கு ஒருலட்சம் கோடி ரூபாய்க்கு ஆர்டர் தந்துள்ளோம் என தெரிவித்தார்.

ஆனால், இதுவரை எந்த ஒரு ஆர்டரும் பெறப்படவில்லை. எனவே, பாராளுமன்றத்தில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆர்டர் தந்ததற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும், இல்லையெனில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ ராகுல்காந்தி என குறிப்பிட்டுள்ளார்.

You may have missed