ஓய்வுபெற்ற எஸ்.எஸ்.சி. அதிகாரிகளுக்கு மருத்துவ சலுகைகள் மறுப்பு

டில்லி:

ய்வுபெற்ற குறுகிய சேவை ஆணைக்குழு (Short-Service Commission – SSC) அதிகாரிகளுக்கு இனி மருத்துவ வசதிக்கான சலுகைகள் வழங்கப்பட மாட்டாது என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

சேவையாளர்கள் எதிர்கொள்ளும் பற்றாக்குறையை சமாளிப்பதற்காகவே எஸ்.எஸ்.சி. அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களது பதவி காலம் 14 வருடங்கள் மட்டுமே.

பணிகாலம் முடிவுற்ற பிறகு இவர்களுக்கான வேலை வாய்ப்புகள், மற்றும் முழுநேர அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்த நிச்சயமற்ற தன்மையால், இத்தகைய பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் கிடைப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஊழியர் பங்களிப்பு சுகாதார சேவைகள் (ECHS) திட்டத்தின் கீழ் அனைத்து எஸ்.எஸ்.சி. அலுவலர்களுக்கும் மருத்துவ வசதிகளை வழங்கும் என்று அறிவித்தது.

ஆனால், தற்போது அந்த சலுகைகள் மறுக்கப்பட்டுள்ளதால் முன்னாள் அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து , பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் முன்னாள் சேவையாளர்கள் நலத்துறை கூறுகையில், “குறுகிய சேவை அதிகாரிகள் ஓய்வூதியம் பெறுவோர் அல்ல. எனவே, அவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள் அல்ல. மேலும், இதில் மாற்றங்கள் ஏதும் செய்யப்படும் பட்சத்தில், ECHS-ல் ஓய்வூதியம் பெறாத பிற ஊழியர்களும் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள கோரிக்கை விடுக்கக்கூடும்,” என்றது.

பயனாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் பட்சத்தில், ஏற்கனவே நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் ECHS-ன் வரவு செலவுத் திட்டம், மனிதவளம், பல்வேறு பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ வசதி, மற்றும் இணைந்த உள்கட்டமைப்பு போன்ற வளங்களை அதிகரிக்க வேண்டியிருக்கும், என்று முன்னாள் சேவையாளர்கள் நலத்துறை கூறியது.