பணி இடமாற்றத்தை தவிர்க்கும் அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி…ரெயில்வே வாரியம் அதிரடி

டில்லி:

பதவி உயர்வுடன் கூடிய பணி இடமாற்றத்தை தவிர்க்கும் அல்லது காலதாமதம் செய்யும் ரெயில்வே அதிகாரிகள் பதவி உயர்வில் இனி சீனியாரிட்டியை இழப்பார்கள் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இது போன்ற தந்திரத்தை கையாளும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க ஒரு ஆண்டு காலம் தடை விதிக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டில் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பான அறிவிக்கையை ரெயில்வே வெளியிட்டது.

இது குறித்து ரெயில்வே வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறகையில், ‘‘இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி ஒரு மாத காலத்திற்குள் பணியில் இருந்து விடுபடுவதை அவரது உயர் அதிகாரி உறுதிபடுத்த வேண்டும். அதோடு பணியிட மாற்றம் செய்யப்பட்ட இடத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பணியில் சேர வேண்டும். இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி அதை தவிர்க்கும் வகையிலோ அல்லது கால தாமதம் செய்யும் வகையில் செயல்படுவதால் இரு இடங்களிலும் பிரச்னை ஏற்படுகிறது. அவர் தற்போது பணிபுரியும் இடத்திலும், இடமாற்றம் செய்யப்பட்ட பணியிடத்திலும் பிரச்னை எழுகிறது.

இதன் காரணமாக தான் புதிய உத்தரவை ரெயில்வே கடந்த 29ம் தேதி வெளியிட்டுள்ளது. பணியிடமாற்றம் அல்லது பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்ற உத்தரவை ஒரு அதிகாரி பின்பற்றவில்லை என்றால் அவர் அந்த பதவி உயர்வு உத்தரவை ஏற்க மறுத்துவிட்டதாக கருதப்படும். அதன் பின்னர் அந்த பதவி உயர்வை அவர் மீண்டும் ஒரு ஆண்டு காலத்திற்கு பெற முடியாது. அவர் சீனியாரிட்டியை இழப்பார்’’ என்று தெரிவித்தார்.