டெல்லி: 5 நாட்கள் கழித்து, டெல்லியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் காணப்படுவது பொதுமக்களை நிம்மதி அடைய வைத்திருக்கிறது.
முன் எப்போதும் இல்லாத வகையில், தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. மக்கள் சுவாசிக்க முடியாத அளவு காற்றின் தரம் இருந்தது. விளைவாக ஆக்சிஜன் விற்பனைக்கு என்ற ரீதியில் பார்கள் திறக்கப்பட்டன.


அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவு, வாகன புகையால் காற்றின் தரம் மோசமடைந்ததாக டெல்லி அரசு கூறியது. நச்சுத்தன்மையான காற்றால் பொதுமக்களும் சுவாச கோளாறால் அவதிப்பட்டு வந்தனர்.
இந் நிலையில் கடந்த 5 நாளாக காற்றின் தர மதிப்பீடு அபாய கட்டத்தில் இருந்தது. அது தற்போது குறைந்து, 254 ஆக பதிவாகி இருக்கிறது. டெல்லி லோதி சாலையில் இவ்வாறு பதிவாகி உள்ளது.


இந்தியாவின் பெரிய வர்த்தக பரபரப்புக்கு பெயர் பெற்ற சாந்தினி சவுக் பகுதியில் காற்றின் குறியீடு 299 ஆக உள்ளது. இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலைய வளாகத்தில் காற்றின் தரம் 315ஐ எட்டி இருக்கிறது.
தலைநகர் டெல்லியுடன் அருகில் உள்ள நகரங்களான காசியாபாத், நொய்டா ஆகியவையும் ஓரளவு முன்னேறி இருக்கின்றன. காற்றின் தரம் மெதுவாக சீரடைந்து வருகிறது.