தூக்கிலிடப்பட்ட குற்றவாளிகள் 4 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது…

டெல்லி:

நிர்பயா வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்களின் மரணம் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களது உடல் டெல்லியில் உள்ள தீன்தயால் உபாத்யாயா மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் ஆம்புலன்சில் உடற்கூறு சோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

திகார் சிறை வளாகத்தில் இருந்து 4 பேரின் உடலுடன் வெளியே வரும் ஆம்புலன்ஸ்

மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. பல்வேறு தடங்கல்களை தாண்டி, இன்று  குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை  நிறைவேற்றப்பட்டது.

அவர்களின் மரணம் சிறை மருத்துவரால் உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவர்களின் உடல் தூக்கில் இருந்து மீட்கப்பட்டு, தில்லி சிறை வளாகத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பலத்த பாதுகாப்புடன் அருகில் உள்ள  தீன் தயால் உபாத்யாய் மருத்துவமனைக்கு உடல்களை எடுத்துச் செல்லப்பட்டது.

உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்குள் வரும் ஆம்புலன்ஸ்

அங்கு சிறை கையேடு மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களால் பரிந்துரைக்கப்பட்டபடி பிரேத பரிசோதனை செய்யப்படும். பிரேத பரிசோதனைக்கு பின்னர், குற்றவாளிகளின் உடல்கள் அந்தந்த குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

இன்று மதியம் 12:30 மணிக்குள் பிரேத பரிசோதனை முடிவடையும் வாய்ப்பு உள்ளதாக தீன் தயால் உபாத்யாய் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

அதைத்தொடர்ந்து, பிரேத பரிசோதனை அறிக்கை  நீதித்துறையிடம் ஒப்படைக்கப்படும்.