6வது வெற்றியை ருசித்த டெல்லி அணி – புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம்!

துபாய்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற டெல்லி புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு சென்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது.

பின்னர், சுமாரான இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் பென் ஸ்டோக்ஸ் 35 பந்துகளில் 41 ரன்களை அடித்தார். மற்றொரு துவக்க வீரர் பட்லர் 9 பந்துகளில் 22 ரன்களை அடித்தார்.

ஸ்மித் 1 ரன்னில் அவுட்டாக, சஞ்சு சாம்ஸன் 18 பந்துகளில் 25 ரன்களை மட்டுமே அடித்தார். முதல் 2 போட்டிகளில் மட்டுமே அசர வ‍ைத்த சாம்ஸன் அடுத்தடுத்த போட்டிகள் எதிலும் சொல்லும்படியாக சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராபின் உத்தப்பாக 27 பந்துகளில் 32 ரன்களை அடிக்க, ராகுல் டெவாஷியா 18 பந்துகளில் 14 ரன்களை அடித்து சொதப்பினார். முடிவில், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 148 ரன்களே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது ராஜஸ்தான் அணி. இது அந்த அணியின் ஐந்தாவது தோல்வியாகும்.

டெல்லி அணி பந்துவீச்சாளர் அஷ்வின் 4 ஓவர்கள் வீசி 17 ரன்களை மட்டுமே கொடுத்து, 1 விக்கெட்டை கைப்பற்றினார்.