டெல்லி:

லகிலேயே அதிக காற்று மாசு ஏற்பட்டுள்ள நகரம், டெல்லி என்று ஸ்கைமெட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் கடந்த சில வாரங்களாக  வரலாறு காணாத அளவுக்கு காற்று மாசு ஏற்பட்டு உள்ளது. இதனால்,  மக்கள் சுவாசிக்கவே கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் அரியானாவில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதால் எழும்புகை டெல்லியை சூழ்ந்திருப்பதன் காரணமாகவே, டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.  இதையடுத்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப் பட்டு வரும்  நிலையில், காற்று மாசு ஏற்படுவதை குறைப்பது குறித்து மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க உச்சநீதி மன்றமும் அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், Skymet மற்றும் IQ Air Visual என்ற நிறுவனங்கள் காற்று மாசு குறித்து ஆய்வு செய்து ஆய்வறிக் கையை வெளியிட்டுள்ளது. அது வெளியிட்டுள்ள முதல் 10 நகரங்கள் பட்டியலில், டெல்லி முதலிடத்தைப் பெற்றுள்ளது. மேலும், கொல்கத்தா, மும்பை போன்ற நகரங்களும் இந்த பட்டியலில் இடம்பிடித்து உள்ளன.

அந்த பட்டியலில்,  காற்று மாசு அளவு 527 புள்ளிகளைப் பெற்று உலகின் மாசடைந்த நகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில் 234 புள்ளிகளுடன் பாகிஸ்தானின் லாகூர், தாஷ்கன்ட், கராச்சி, கொல்கத்தா, செங்டூ, ஹனோய், குவாங்சு, மும்பை, காத்மாண்டு நகரங்கள் உள்ளன.

காற்று மாசை Air Quality Index என்று அழைக்கப்படுகிறது. அதன்படி,  அதன் அளவு 0 – 50 புள்ளிகள் இருந்தால் சிறப்பானது என்றும், 51 – 100 இருந்தால் போதுமானது என்றும், 101 – 200 என இருந்தால் காற்று சற்று மாசடைந்துள்ளது என்றும், 301 – 400 என இருந்தால் காற்று மாசடைந்துள்ளது என்றும், 401 – 500 என இருந்தால் காற்று கடுமையாக மாசடைந்ருதள்ளது என்றும் அர்த்தம் கொள்ளலாம்.  அதற்கு மேல் இருந்தால், அது அபாயகரமானது என்று எச்சரிக்கப்படுகிறது.