டில்லி

டில்லியில் ஆட்சி செலுத்தி வரும் ஆம் ஆத்மி கட்சி பேனர்கள் வைத்தற்காக பாஜக ஆளும் டில்லி மாநகராட்சி ரூ.13000 கோடி வாடகை கேட்டுள்ளது.

டில்லி யூனியன் பிரதேசத்தை கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆண்டு வருகிறது.  அதே வேளையில் டில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளையும் பாஜக கைப்பற்றி ஆட்சி செலுத்தி வருகிறது.  இந்த மூன்று நகராட்சிகளும் நிர்வாகத் திறமையின்மை மற்றும் லஞ்ச ஊழல்களால் தடுமாறி வருவதாக ஆம் ஆத்மி அரசு குற்றம் சாட்டி வருகிறது.

பாஜக செய்தி தொடர்பாளர் வீரேந்தர் பப்பர் சமீபத்தில் “டில்லியில் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், உள்ளிட்ட பல மாநகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.  இதற்கு முக்கிய காரணம் கெஜ்ரிவால் அரசு இதற்கான பணத்தை ஒதுக்கீடு செய்யாததே ஆகும். துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ரூ.938 கோடியை டில்லி மாநகராட்சிக்கு அரசு அளிப்பதாகச் சொல்லி இருந்தார்.  ஆனால் பணம் வரவில்லை.

டில்லியின் ஆளும் கட்சியான  ஆம் ஆத்மி கட்சி மேம்பாலங்கள் மற்றும் நடை பாலங்களில் ஏராளமான சுவரொட்டிகளும் பானர்களும் வைத்துள்ளன.  இதற்காக ரூ.13000 கோடி வாடகை மாநகராட்சிக்குத் தரவேண்டியது உள்ளது.  இதுவரை பல முறை நினைவு படுத்தியும் இதுவரை வாடகைப் பணத்தைத் தராமல் அரசு ஏமாற்றி வருகிறது.  அதை உடனடியாக கெஜ்ரிவால் அரசு அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.