டெல்லியில் பயிற்சி மைய கட்டடம் இடிந்தது – மாணாக்கர்கள் உட்பட 5 பேர் பலி!

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் பயிற்சி மையம் செயல்பட்டு வந்த ஒரு கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், அதில் பயிற்சிபெற்ற 4 மாணாக்கர்கள் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 15பேர் வரை காயமடைந்துள்ளர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; டெல்லியின் பஜன்புரா பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டடம் ஒன்றில், பயிற்சி வகுப்புகளுக்கான மையம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தப் பயிற்சி வகுப்பில் நேற்று 30க்கும் அதிகமான மாணாக்கர்கள் பங்கேற்றனர்.

பயிற்சி வகுப்பு நடந்துவந்தபோது, புதிதாக கட்டப்பட்ட கட்டுமானத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்தது. அப்போது கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர் மாணாக்கர்கள்.

உடனே, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு வந்த 7 தீயணைப்பு வாகனங்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டன. ஆனால், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் 4 பேர் பயிற்சிபெற்ற மாணாக்கர்களாம்! மேலும், 15 பேர் வரை காயமடைந்துள்ளனராம்.

எதிர்கால வாழ்க்கை மேம்பாட்டிற்காக பயிற்சிபெற வந்த மாணாக்கர்கள் 4 பேரின் வாழ்வு, இப்படி சோக முடிவை சந்தித்ததை எண்ணி அப்பகுதியைச் சேர்ந்த பலரும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.